Sunday 24 January 2016

திருநல்லம் - 01

ராகம் - செஞ்சுருட்டி
தாளம் - ஆதி (திஸ்ரநடை)

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பொருள்:

ஆலாகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷமானது, தொண்டைக்கு கீழே இறங்கி உள்ளே செல்லாமல், உமையம்மை தன் கரங்களை சிவபெருமானின் கழுத்தில் வைத்தாள். அவளின் மாங்கல்ய பாக்யத்தால், சிவபெருமானின், கழுத்தில் அந்த விஷம் அதே இடத்தில் நின்றது. அதனால், அவரது தொண்டைப்பகுதி, நீல நிறமானது. நீலகண்டன், நீலக்ரீவன் என்று பெயர் பெற்றார்.

இங்கு சம்பந்தர், சிவபெருமானை, கறைசேர் கண்டா என்று பாடுகிறார். நிழல் பட்டால் போல், அவர் தொண்டைப்பகுதி, கறை தோய்ந்ததாக உள்ளது.

கல் ஆல மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்த தேவர்கள் (இமையோர்), இவ்வாறு அவரவர்களுக்கு தெரிந்த பல மொழிகளால், சிவபெருமானை தொழுது பாடுகின்றனர். தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள். அதனால் இமையோர் என்று சம்பந்தர் பாடுகிறார்.

சிவ குரு, தக்ஷிணாமூர்த்தி, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிகளுக்கு, மௌன உபதேசம் செய்வதாக நூல்கள் கூறுகின்றன. நாமும் சித்திரத்திலும், சுதை வேலைப்பாடுகளிலும், சிற்பங்களிலும் காண்கிறோம்.

ஒரே ஒரு வில்லினை எய்தி, அரக்கர்களின் திரிபுரத்தை (மூன்று மதில்கள் கொண்ட சிறந்த காவல் நிறைந்த நகரம். அரண் - மதில்) எரித்து வீழ்த்தினார்.

இப்படிப்பட்ட சிறப்புகள் பல பெற்ற நல்லவன், நம்மை ஆள்வான். நல்லம் நகர் மேவும் இறைவனும் அவரே.

சிறப்பு குறிப்பு:
இத்தலத்தில் புரூரவஸ் மஹாராஜா செய்த துதியில், சிவபெருமான், திரிபுரத்தை தன் வில்லினை ஒத்த புருவத்தினை வில்லாகவும், தன் நெற்றிக்கண்ணினை அம்பாகவும் கொண்டு, தன் பார்வையாலேயே எரித்து வீழ்த்தியதாக போற்றியுள்ளார்.

மேலும் ஸ்கந்த புராணத்தில், சிவபெருமான், தன் புன்சிரிப்பினால் மட்டுமே அழித்ததாக ஒரு விளக்கம் வரும்.

திரிபுர சம்ஹரதிற்கு, விஷ்ணு அம்பாகவும்,ஆதி சேஷன் நாணாகவும், மற்றும் தேவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருவியாகவும் வர முற்பட்டு, சிவபெருமான் அவர்களின் துணைக்கொண்டு அழிப்பதாக இருந்தார். தேவர்களுக்கு, தங்கள் உதவி கொண்டு சிவபெருமான் பெரும் செயல் செய்யவிருக்கிறார் என்று கர்வம் கொண்டனர். அதனால் அவர்களின் கர்வத்தை அழிக்கும் பொருட்டு, தனது பார்வை என்னும் ஒற்றை அம்பு கொண்டு திரிபுரத்தை அழித்தார்.

சிறப்பு குறிப்பு கொடுத்தமைக்கு, திரு S,பாலசுப்ரமண்யன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இந்த திருநல்லம் கோவிலில் உள்ள த்ரிபுராந்தக வடிவம், மிகவும் அற்புதமான ஒன்று.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. மிக நன்றாக இருந்தது. பா சுரம் விளக்கம் தொடர்ந்து பண்ணுடன் பண்பட்ட விருத்தம்-மன நிறைவு பெற்றோம்-அதிக பதிகங்கள் கேட்க விழைகிறோம்.வாழ்த்துக்கள்.☺

    ReplyDelete
  2. மிக நன்றாக இருந்தது. பா சுரம் விளக்கம் தொடர்ந்து பண்ணுடன் பண்பட்ட விருத்தம்-மன நிறைவு பெற்றோம்-அதிக பதிகங்கள் கேட்க விழைகிறோம்.வாழ்த்துக்கள்.☺

    ReplyDelete