Wednesday 20 January 2016

திருநெடுங்களம் - 10

ராகம் - பைரவி
தாளம் - ரூபகம்

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

வெஞ்சொல் - கொடுமையான சொற்கள்
தஞ்சொல் - தன் சொல்

கொடிய சொற்களையே தங்கள் சொற்கள் என்று கொள்ளும்படியான சமணர்கள், நல்ல சங்கம் இல்லாத பௌத்தர்கள், இவர்கள் இருவரும், வேதம் கூறும் உண்மைப் பொருளை அறியாதவர்கள். அவர்களை விடுத்து, அழியாப்புகழுடை வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை, தங்கள் நெஞ்சில் வைத்து வாழும் அடியவர்களின் துயரங்களை, போக்குவாயாக என்று நெடுங்களம் வாழ் இறைவனை சம்பந்தர் பாடுகிறார்.

பௌத்தம், சமணம் இந்த இரு மதங்களும், வேதத்தை பொய் என்று சொல்கின்றன. அதனால், சம்பந்தர் அவர்களின் சொல்லை கொடிய சொல் என்று உரைக்கிறார். வேதத்தை மறுப்பவர்கள் நாஸ்தீகர்கள். வேதத்தை மதிப்பவர்கள் ஆஸ்தீகர்கள். இன்று இப்பொருள் திரிந்து காணப்படுகிறது! அக்கால நாஸ்தீகர்கள், வேதம் இல்லை என்று சொன்னார்கள். அவர்களுக்கு கடவுள் என்று ஒருவர் இருந்தார். இன்று?

வேதத்தை தழுவி நிற்கும் வைதீக மதத்தை சம்பந்த பெருமான், போற்றுகிறார் என்று இதிலிருந்து நாம் அறிய வேண்டும். வேதத்தை, துஞ்சல் இல்லா வாய்மொழி என்று இங்கே கூறுகிறார். அழியாப் புகழ் கொண்ட சத்தியம் - வேதம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment